தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் பரோலில் சென்றுள்ள கைதிகளுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, 11 கைதிகளுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்ற சென்னை உயர்நீதிமன்றம், ஜூன் 15- ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் தண்டனைக் கைதிகளாக இருந்து பரோலில் சென்றவர்கள், சிறைக்குத் திரும்ப இயலாத நிலை இருந்ததால், அவர்களுக்கான பரோல் காலத்தை நீட்டித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பரோல் காலம் முடிந்து சிறைகளுக்குத் திரும்பும் கைதிகளைத் தனிமைப்படுத்த தமிழகத்தின் அனைத்து மத்தியச் சிறைகளிலும், பெண்கள் சிறைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., அனுப்பிய கடிதத்தை மேற்கோள்காட்டி, 11 கைதிகளுக்கான பரோல் நீட்டிப்பு உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்டு, பரோல் நீட்டிப்பு உத்தரவைத் திரும்பப் பெற்ற நீதிபதிகள், இந்த 11 கைதிகளும் ஜூன் 15- ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.