Skip to main content

முதல்வரின் வாகனத்தை விரட்டிய போதை ஆசாமிகள்! காரில் மோதி விபத்து!  

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

 

நாகர்கோவிலில் இன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு, “நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று அறிவித்துவிட்டு மதுரைக்கு காரில் கிளம்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

ACCIDENT

 

 

முதல்வர் வாகனம் விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் அருகே வந்தபோது, இன்னொரு கார் மிக வேகமாகப் பின்தொடர்ந்தது. முதல்வர் கான்வாயை பின்னுக்குத்தள்ளி முன்னேறப் பார்த்தது. போலீசார் சைகையால் தடுத்தும் கேட்காமல், கான்வாய்க்குள் புகுந்தது. பல இடங்களில் தடுத்தும், கட்டுப்பாடு இல்லாமல் முன்னேறியது அந்தக் கார். உப்பத்தூர் அருகில்,   அந்த வாகனத்தை மதுவிலக்கு ஆய்வாளர் சிவராஜ்பிள்ளை தடுத்து நிறுத்தியபோது, அவருடைய கார் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.  அந்தக் காரில் வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டிமணி, பாலமுருகன், காந்தாரிமுத்து ஆகிய மூவரும் மதுபோதையில் இருந்தனர். கோவில்பட்டியிலிருந்து முதல்வரின் காரை விரட்டி வந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரிடமும் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

காவல்நிலையத்தைப் பூட்டிவிட்டு விசாரிக்கும்போது   “கவர்மெண்டுதான் டாஸ்மாக்ல சரக்கு விற்குது. நாங்க குடிக்கிறதுனால கவர்மெண்டுக்கு வருமானம்தான். எல்லாரும் போறதுக்குத்தானே ரோடு போட்டிருக்கு. இந்த ரோட்டுல சி.எம்.மும் போலாம். எங்கள மாதிரி சாதாரண குடிமகன்களும் போலாம். நாங்க ரெகுலரா போற ரோடு. இன்னிக்கு இந்த ரோட்டுல சி.எம். வந்தா அது நாங்க பொறுப்பா? தேவையில்லாம எங்க காரை மறிச்சு ஆக்சிடென்ட் ஆக்கிட்டீங்க.” என்கிற ரீதியில் புலம்புகிறார்களாம் அந்தக் குடிமகன்கள்.

 

மூவரும் ஏதோ திட்டத்தோடு வந்தவர்கள் போலத் தெரிவதால், விசாரணையைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்