சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மணடபத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. மேடையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும், இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 4500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணிகள் கட்சிகள் வெற்றிக்கு உழைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி தீர்மானம், சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம், மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தல் உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுகவில் 56 மாவட்டங்களாக பிரித்து கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரும் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதைத்தொடர்ந்து அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிதி ரூபாய் 226.90 கோடி நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் உள்ளது. தேர்தல் நிதியாக ரூபாய் 46.70 கோடியும், புதிய உறுப்பினர் சேர்ப்பு மூலம் ரூபாய் 1.9 கோடியும் பெறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.