
தமிழக அளவில் சுமார் 14 மாவட்டங்களில் பிரதமர் கிஷான் திட்டத்தில் கூலி விவசாயிகள் பல ஆயிரக் கணக்கானோரை வேளாண்துறை அதிகாரிகள் அலுவலர்கள் துணையோடு சேர்க்கப்பட்டு நிதி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறை களம் இறங்கியுள்ளது. இது இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கென்று ஒரு தனி குழுவை அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து விவசாயி அல்லாதவர்கள் பெற்றுள்ள பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதன்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் ஒவ்வொரு வட்டத்திலும் போலிவிவசாயிகள் குறித்து ஆய்வு செய்யுமாறு குழுக்களை நியமித்துள்ளார்.
இந்த குழுக்கள் 1.4.2020-க்கு பிறகு இந்த திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ள பயனாளிகள் எத்தனை பேர், அதில் தகுதியுள்ள விவசாயிகள் தகுதி இல்லாத விவசாயிகள் எத்தனை பேர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக செஞ்சி அருகில் உள்ள வல்லம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு இல்லாமல் ஒப்பந்த ஊழியர்கள் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் 70 ஆயிரம் பேர். அதில் 42 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்களை சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 8,000 பேர் இம்மாவட்டத்தில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதும் அவர்களது வங்கிக் கணக்கில் 4 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெற்றுவரும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்து 250 பேரின் வங்கிக் கணக்குகளில் இருந்து 6 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் இத்திட்டத்தில் சேர்ந்த போலி விவசாயிகளின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்யப்பட்டு அந்த கணக்கில் இருந்த இருப்புத் தொகையை வங்கிகள் மூலம் திரும்ப பெற்று அரசின் வங்கி கணக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று வரை விவசாயிகள் 3,750 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து 4,000 ரூபாய் வீதம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையும் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இப்படி இதுவரை 50 ஆயிரம் போலி விவசாயிகளில் 19 ஆயிரம் பேரிடம் இருந்து 7 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 ஆயிரம் பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேளாண்துறையில் விழுப்புரம் மாவட்ட இணை இயக்குநராக செயல்பட்டு வந்த கென்னடி ஜெபக்குமார், கடலூர் இணை இயக்குநர் வேல்விழி உட்பட நான்கு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக வேளாண்துறை. இந்த மோசடி குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு பொதுநிலை இயக்கங்கள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த போராட்ட இயக்கத்தினர், இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் வேளாண்துறை உயர் அதிகாரிகள் மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்ட தனியார் கம்ப்யூட்டர் மையத்தினர் உட்பட பாரபட்சமில்லாமல் அனைவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு இந்த திட்டம் முறையாக போய் சேர வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.