Skip to main content

பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்; ஸ்பாட்டுக்கு வந்த மத்திய அரசு அதிகாரிகள்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Central committee inspection at paddy procurement station

 

பருவம் தவறிப் பெய்த கனமழையால், சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த மத்திய குழுவால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், சமீபத்தில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. அதன் நெல்மணிகளின் ஈரப்பதம் அதிகரித்தும் முளைவிட்டும் காணப்படுகிறது. இதனால் 25 சதவீத ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களை கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு முதல்வர், நெல் கொள்முதல் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் எனவும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட குழுவை டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி நெற்பயிர்களின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி யூனூஸ், பிரபாகரன், போயா ஆகிய மூன்று தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட குழு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர்.

 

அந்த வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு, கச்சநகரம்,வலிவலம், பட்டமங்கலம் உள்ளிட்ட  ஏழு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெற்பயிர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அழுகிய நிலையில் முளைத்துப் போன நெற்கதிர்களை கையில் ஏந்தியபடி நின்ற விவசாயிகள் அதை அதிகாரிகளுக்கு காண்பித்தனர். அதுமட்டுமின்றி, மழையினால் முளைத்துப்போன நெற்கதிர்களை ஓரம் ஒதுக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்