விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழஉப்பிலுகுண்டு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது, வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடி விபத்தில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கல்குவாரியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மதுரை, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே குவாரி உரிமையாளரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.