கர்நாடக சதிக்கு பலியாக கூடாது காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும்! என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், ஆணையம் அமைக்கப்படாமல் தடுப்பதற்கான சதிகளை கர்நாடகம் தொடங்கியிருக்கிறது. காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு கர்நாடக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருவது மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், அதில் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களை பரிந்துரைக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன்படி தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை பகுதிநேர உறுப்பினராக நியமிக்கும்படி பரிந்துரைத்துள்ளது. ஆனால், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இதுவரை தங்கள் பிரதிநிதிகளின் பெயரை பரிந்துரைக்கவில்லை. அதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதிலும், அதன் முதல் கூட்டத்தைக் கூட்டுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு செய்வதற்கு எதுவுமில்லை என்றும், சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் பகுதிநேர உறுப்பினர்களை பரிந்துரை செய்தால் மட்டும் தான் ஆணையத்தைக் கூட்ட முடியும் என்று மத்திய நீர்வளத்துறை கூறியுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பகுதி நேர உறுப்பினர்களை நியமிப்பது கடினமான பணி அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் நீர்வளத்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் செயலாளரைத் தான் பகுதி நேர உறுப்பினராக பரிந்துரைக்க வேண்டும் என மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் நீர்வளத்துறை செயலாளரின் பெயரைக் குறிப்பிட்டு பரிந்துரைத்தால் போதுமானது. ஆனால், அதைக்கூட செய்யாமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்துவது இயல்பான ஒன்றாக இருக்க முடியாது. காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை கேரளமும், புதுச்சேரியும் சிறிய பங்குதாரர்கள். காவிரி சிக்கலால் அந்த மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படப் போவதில்லை. கர்நாடகமும், தமிழகமும் தான் முதன்மை பங்குதாரர்கள். அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான பகுதி நேர உறுப்பினரின் பெயரை கர்நாடகம் உடனடியாக பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டு 4 நாட்களாகியும் பகுதி நேர உறுப்பினரின் பெயரை கர்நாடக அரசு பரிந்துரைக்காதது மேலாண்மை ஆணையத்தை முடக்கும் நோக்கம் கொண்டதாகும்.
பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்திற்கு துரோகம் இழைக்கப் பட்டிருப்பதாகவும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருப்பதாகவும் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் அமையக் கூடாது என்பதில் கர்நாடகம் எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் எதுவும் தேவைப்படாது. தமிழகத்தின் எதிர்பார்ப்பெல்லாம் கர்நாடகத்தின் சதி வலையில் தெரிந்தோ, தெரியாமலோ மத்திய அரசு வீழ்ந்துவிடக் கூடாது என்பது தான்.
கர்நாடகம் பகுதி நேர உறுப்பினரை நியமித்த பிறகு தான் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், இப்போதைக்கு ஆணையத்தைக் கூட்ட முடியாது. இது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும். தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதில் தமிழகத்திற்குரிய நியாயமான பங்கு கிடைக்காமல் தடுக்கவும் தான் இது உதவும். கர்நாடகத்தின் தீய எண்ணம் கொண்ட சதியை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, அடுத்த சில நாட்களுக்குள் கர்நாடகம் அதன் பகுதிநேர உறுப்பினரை நியமிக்காவிட்டால், இருக்கும் உறுப்பினர்களைக் கொண்டு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும்.
காவிரி செயல்திட்டத்தின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தலைவரையும் சேர்த்து மொத்தம் 9 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவர்களில் மூன்றில் இரு பங்கு, அதாவது 6 பேர் இருந்தால் ஆணையத்தைக் கூட்ட முடியும். ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மத்திய அரசால் நியமிக்கப் படும் நிலையில், தமிழகத்தின் பகுதி நேர உறுப்பினரையும் சேர்த்து ஆணையத்தின் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட முடியும். நடப்பு நீர்ப்பாசன ஆண்டு தொடங்கி விட்ட நிலையில், கர்நாடக அணைகளின் நீர் மட்டம், நீர் வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும். ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு வசதியாக கேரள அரசும், புதுவை அரசும் அவற்றின் பிரதிநிதிகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.