
தமிழக சட்டப்பேரவையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்குண்டான பதிலை, தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவாதத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இலங்கை கடற்படை கைப்பற்றுள்ள படகுகளை திருப்பி தர வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்திருந்தோம். அந்த தீர்மானத்தை, பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்திருந்தோம். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடிஇலங்கை சென்ற போது, மீனவர்கள் விடுதலை மற்றும் கச்சத்தீவை குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சிறையில் வாழும் 97 மீனவர்களும், சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
ஒன்றிய அரசும், இந்தியப் பிரதமரும் நமது கோரிக்கைகளை புறக்கணிக்கிறார்கள் என்பதை இங்கு வருந்த வேண்டியுள்ளது. ஒன்றிய அரசு எப்படி நடந்தாலும், நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாம் ஒருபோதும் தவறமாட்டோம், திமுக அரசு அதற்கு எப்போதும் துணை நிற்கும். மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், அவர்கள் மீன்பிடிக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான குறிப்பாக மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு செல்லும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை களைவதற்கு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாலும் கூட, இலங்கை கடற்படையினரால் கைது நடவடிக்கை நடந்து கொண்டே இருக்கிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஒரு பகுதியாக தமிழக அரசு ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்காக, தெற்குப்பகுதி இந்திய பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடி செலவில் மீன்பிடித்தளம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும். ரூ.60 கோடி மதிப்பீட்டில் பாம்பன் பகுதியில் மற்றும் ரூ.150 கோடி மதிப்பீட்டில் குண்டுக்கல் பகுதியிலும் மீன்பிடித் துறைமுகம் மேற்கொள்ளப்படும். கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய பொருட்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியுடன் தேவையான உபகரணங்களை அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7,000 பயனாளிகளுக்கு ரூ52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மீன்பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் உளர்த்தும் தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் சுமார் 2,000 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.9.90 கோடியில் செயல்படுத்தப்படும்.
மீன் வளம் சார்ந்த வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுது பார்த்தல், கட்ருபாடி தயாரித்தல், கடற்சிற்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்களைச் செய்ய ரூ.54.48 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்படக்கூடிய திட்டம் செயல்படுத்தப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576 கோடியே 73 லட்சத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் மன்னார் வளைகுடா மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பெரிதும் பயன்பெறுவார்க” எனத் தெரிவித்தார்.