வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை விற்க கட்டுபாடுகள் விதிக்கும் அரசாணைக்கு தடை கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் மணலை பொதுபணித்துறை மட்டுமே விற்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்து அரசாணையை தடை விதிக்க வேண்டும் எனக் கூறி சென்னையை சேர்ந்த ஆதிமூலம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயதார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பதற்கு கட்டுபாடுகளை விதிக்க தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசின் அரசாணையானது மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிடும் வகையில் இருப்பதாகவும், இதற்கு பின்னனியில் மணல் மாஃபியா செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மணல் குவாரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தலைமை வழக்குரைஞர் அவகாசம் கோரினார்.
இதனையடுத்து ஒரு வார காலத்திற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதி ஒத்திவைத்தனர்.
- சி.ஜீவா பாரதி