ரிவர்ஸ் எடுக்கும்போது கடலுக்குள் கார் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒருவரை அழைத்துச் செல்ல தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று அங்கு வந்துள்ளது. இந்த காரில் கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டுநராக இருந்துள்ளார். இச்சூழலில் தான் ஓட்டுநர் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்தது. அச்சமயத்தில் காரின் கதவைத் திறந்து கடலோர காவல்படை வீரர் தப்பினார். இருப்பினும் கடலில் இருந்து வெளியே வந்தவர் அங்கே மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கிருந்த சக கடலோர காவல்படை வீரர்கள் மயங்கிய கடலோர காவல்படை வீரரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதே சமயம் கடலில் மூழ்கிய கார் ஓட்டுநரை மீட்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல்படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கார் ஓட்டுநர் முகமது சகியை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.