தமிழகத்தில், குறிப்பாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்குக் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. அதன் பின்னர் கேரளாவில் இருந்து திரும்பி வரும் லாரிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாகக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. அதாவது திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த மருத்துவக் கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாகக் கொட்டப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் அப்பகுதி மக்கள், ‘தமிழக - கேரள எல்லையில் வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும்’ என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவைச் மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரளாவை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளங்களான கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு, கேரளாவிற்குக் கடத்திக் கொண்டு இருக்கின்றனர். கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவு, குப்பைகள், ஏலக்ட்ரானிக் கழிவுகள், போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்லைகளில் டன்னு டன்னாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். எல்லைகளைப் பாதுகாக்காமல் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்து தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்த அரசின் செயல்கள் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு.
பக்கத்தில் இருக்கும் கேரளா எல்லா வளத்தோடும், நலத்தோடும் சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்?. அரசாங்கத்தின் அதிகாரிகள், சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்களும் என்ன செய்கின்றனர்? இந்த அளவிற்குக் கேவலமான நிகழ்வுகள் தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன. இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. இது மிகமிக ஒரு கண்டிக்கத் தக்க விஷயம். தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் நாட்டிற்கே அந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் குப்பை நாடா மாற்றிய கேரள அரசைக் கடுமையாக கண்டிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.