திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி என்ற இடத்தில் மைதீன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார் அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று மைதீனை அழைத்துள்ளனர். அப்போது அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு மைதீன் வீட்டைத் தாக்கியுள்ளனர். மேலும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டையும் வீசி உள்ளனர். அச்சமயத்தில் அவ்வழியாக வந்த இளைஞர் மசூது என்பவரை அந்த மர்ம கும்பல் அழைத்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞரை மைதீன் வீட்டின் கதவைத் திறக்க முயற்சி செய்யுமாறு கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் மசூதுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர் இதனால் அவரது கை, கால் போன்ற உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த மசூது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் பகுதிகளில் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 2 இரு சக்கர சக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் இந்த சதி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளது சிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.