கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தும் டாடா ஏஸ் வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் தற்பொழுது நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு சில இடங்கள் ஒருவழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. பொள்ளாச்சி நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராஜு என்பவர் டாடா ஏஸ் வாகனத்தில் கோபாலபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அய்யம்பாளையம் என்ற பகுதியில் தனியார் பேருந்து லாரி ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டாடா ஏஸ் ஓட்டுநர் ராஜு மற்றும் அவருடன் உதவிக்கு வந்த ஒருவர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவர்களும் அந்த பேருந்தில் பயணித்த நிலையில் மாணவர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.