Skip to main content

“தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Can't be declared a national calamity Nirmala Sitharaman

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற நிர்மலா சீதாராமன் அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நிர்மலா சீதாராமனிடம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரியும், வேளாண் கடன்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் வெள்ள சேத மதிப்பீடு விவரங்களுடன் கூடிய 72 பக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவினை அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர். வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு கணிசமான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும், மாநிலப் பேரிடர் மேம்பாட்டு நிதியில் உள்ள குறைந்த தொகையைக் கொண்டு பெரும்பாலான சேதங்களை சீர் செய்வது கடினம் எனவும் தமிழக அரசு சார்பில் இந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறு சீரமைப்புக்குத் தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்தபோது பெண் விவசாயிகள் கண்ணீருடன் தங்களது குறைகளைத் தெரிவித்தனர். அப்போது கண்ணீர்விட்டு அழுத பெண் விவசாயிகளுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடியில் உள்ள உமரிக்காடு என்ற பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது. சுனாமியையே தேசியப் பேரிடராக அறிவிக்காத நிலையில், மழை பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த அரசும் தேசியப் பேரிடர் என்பதை அறிவித்தது கிடையாது. வங்கிகள் மூலம் உதவி செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் உள்ளன. எனவே வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்