மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் பண்பாடு பூங்கா மாஸ்டர் பிளான் ஒப்பந்தப் புள்ளியை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கீழக்கரை மற்றும் சின்ன இலந்தைக் குளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களில் சுமார் 65 ஏக்கரில் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அரங்கம் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க, தமிழக சுற்றுலா வளர்ச்சி நிறுவனம், கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் பண்பாடு பூங்கா அமைக்க வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ரத்து செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு அரங்கம், நிர்மாணிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட இடம், அலங்காநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருப்பதால் உள்ளூர் மக்கள் அதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.