Skip to main content

பாலியல் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது? ஸ்டாலின்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
s mk

 

பாலியல் கொடூரங்கள் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் உருக்கமான கடிதம்.

’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வேதனை மிகுந்த மடல்.

இதயமுள்ள எவரையும் நடுங்க வைக்கும் கொடூரம், சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்திருக்கிறது. ஏதுமறியா அந்தப் பிஞ்சு உடலையும், உள்ளத்தையும் 17 பேர் சீரழித்திருப்பது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல். அந்தக் குடியிருப்பின் பாதுகாப்புப் பணியிலும், பராமரிப்புப் பணியிலும் இருந்தவர்களே 7 மாதங்களாக அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்திருக்கிறார்கள் என்பதும், அது வெளியே தெரியாத வகையில் சிறுமியை மிரட்டியிருக்கிறார்கள் என்பதும், கொடூரத்தின் வலி தெரியாத வகையில் போதை ஊசி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் நம் இதயத் துடிப்பை எகிற வைத்து, தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற முக்கிமான கேள்வியை எழுப்புகிறது.

 

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற கோபம் மக்கள் மனதில் வெடிக்கிறது. அதனால்தான், குற்றமிழைத்த 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் ஆவேசம் கொண்டு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது என்ற போதிலும், சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறும்போது அதற்கு எதிரான மனித உணர்வு வெளிப்படும் என்ற இயற்கை நீதியையும் மறுத்திட இயலாது.

 

டெல்லியில் நிர்பயா, காஷ்மீரில் ஆசிபா என இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் இத்தகைய கொடூரங்கள் வகை தொகையின்றி தொடர்கின்றன. அதிலும் 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், சிறுமியருக்கு நேரும் பாலியல் கொடூரங்கள், மூத்த குடிமக்களை நகை-பணத்திற்காக கொலை செய்யும் கொடுமை ஆகியவை அதிகரித்து வருவதை தேசிய அளவிலான புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்திவருகின்றன.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டம் மாணவி புனிதா பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை அருகே அதுவும் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களாவை ஒட்டியுள்ள பகுதியில், காவல்துறை கண்காணிப்பும், பாதுகாப்பும் மிகுந்துள்ள இடத்தில் உமாமகேஸ்வரி என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் பாலியல் கொடுமைக்குள்ளாகி உயிர்ப் பலியாகிக் கிடந்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில், பெரும்பாக்கம் பகுதியில் ஐ.டி.துறையைச் சேர்ந்த இளம்பெண் லாவண்யா கொடூரமாகத் தாக்கப்பட்டு, குற்றுயிராகி சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார். மருத்துவமனையில் அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இவையெல்லாம் ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் தான். இதுபோன்ற நிகழ்வுகள் நாள்தோறும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் உச்சகட்ட கொடூரம்தான் அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்துள்ளது.

 

சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திடும் வகையில் உரிய முறையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு, அவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், அந்த அக்கறை இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கான 13 அம்ச அறிவிப்பை 1.1.2013 அன்று அந்த ஆண்டின் முதல் அறிவிப்பாக அம்மையார் ஜெயலலிதா வெளியிட்டார்.

 

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பெண் காவலர்களைக் கொண்ட சிறப்பு படை, பாலியல் கொடுமை செய்யும் ஆண்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை, ஜாமீனில் வர முடியாத அளவுக்கு வலிமையான சட்டம் என்றெல்லாம் அந்த 13 அம்ச அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. அத்தகைய குற்றம் புரிந்தோர் எவர் மீதும் நடவடிக்கையும் இல்லை.  காரணம், 13 அம்சத் திட்டத்தை செயல்படுத்த அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அரசே அக்கறை காட்டவில்லை. 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பது போலவே அதுவும் ஒரு வெற்று அறிக்கையாகி விட்டதை அப்போதே சுட்டிக்காட்டியுள்ளேன். அதன்பிறகும் பெண்கள் பாதுகாப்பில் அ.தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை. அதனால் தான் இப்போதும் கொடூரங்கள் தொடர்கின்றன.

 

அயனாவரத்தில் சிறுமி, திருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டுப் பெண் என்று பாலியல் கொடுமைக்கு இலக்காகி பரிதவிப்போரின் எண்ணிக்கை தொடர்கிறது, உயர்கிறது. இந்த வேதனை மிகுந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டிய அரசும் காவல்துறையும் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அயனாவரத்திலும், திருவண்ணாமலையிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நேர்ந்த கொடூரத்தின் உண்மைப் பின்னணிகளை முழுமையாக விசாரித்து, குற்றமிழைத்த அனைவரையும் தண்டித்திட வேண்டும். அதற்கேற்ற வகையில், வலிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

இனி எந்த ஒரு பெண்ணுக்கும், சிறுமிக்கும் இந்த அவலம் நேர்ந்திடக்கூடாது. பெண்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் சமுதாயமே முன்னேற்றம் காணக்கூடிய சமுதாயமாகும். தமிழ்நாட்டை பல நிலைகளிலும் பின்தள்ளியுள்ள வக்கற்ற ஆட்சியாளர்கள், பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி வருவது வேதனைக்குரியது.

 

இந்த அவலமான சூழலில், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்திட வேண்டியது அவசியமாகிறது. இல்லத்தரசியராய் இருந்தாலும், மற்ற பணிகளையும் மேற்கொள்வோராய் இருந்தாலும் தாய்மார்கள் மிகுந்த அக்கறையுடன் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவது தாய்மைக்கே உரிய சிறப்பம்சம். வளர்ந்து வரும் தொழில்நுட்பம்-பெருகி வரும் குற்றங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் நடவடிக்கைகளையும் அவர்களிடம் ஏற்படும் மன மாற்றங்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து, நல்ல ஆலோசகர்களாக செயல்படவேண்டிய கடமையும் தாய்மார்களுக்கு இருக்கிறது. அதில் தந்தையின் பங்கும் முக்கியமானது. அப்போதுதான், பாலியல் தொல்லைகளுக்கு வேலியிட்டு சிறுமிகளைப் பாதுகாத்திட முடியும்.

 

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் என்றார் மகாகவி. இன்னொரு முறை இந்த மாபாதகம் தமிழகத்தில் நடக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்.’’

 

20-07-2018.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்” - முதல்வர் வலியுறுத்தல்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The Joint Working Group should be renewed CM insists

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 ஆகிய எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 

The Joint Working Group should be renewed CM insists

அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனத் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Former judges letter to the President

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் நீதிபதிகள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதாவது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், சிவக்குமார், செல்வம், விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் முடிவின் அடிப்படையில், ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால் அதைச் சரி செய்ய 5 நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிடத் தயாராக இருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இருந்தன. இந்த புகார்கள் குறித்து கவனத்திற்குக் கொண்டு வந்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.