Skip to main content

சேலம் கலெக்டர் ரோகிணியிடம் மனுக்கொடுக்க மக்கள் கால் கடுக்க நின்ற பரிதாபம்(படங்கள்)

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
சேலம் கலெக்டர் ரோகிணியிடம் மனுக்கொடுக்க 
திரண்டுவந்த மக்கள்; கால் கடுக்க நின்ற பரிதாபம்



தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறை கேட்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடம் குறைகளை மனுவாக கேட்டுப் பெற்று, அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ரோகினி கடந்த பத்து நாளாக பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குவதும், மாவட்டம் முழுவதும் சுகாதாரப்பணிகள் குறித்த ஆய்வுக்கு செல்வதுமாக பரபரப்பாக இயங்கி வருகிறார்.

இதையடுத்து, குறை கேட்பு நாளான இன்று காலை முதலே சேலம் மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆட்சியர் ரோகினியை சந்தித்து மனு கொடுக்க வந்திருந்தனர்.

காலை பத்தரை மணிக்கு அலுவலகம் வந்தவர்,  ஊனமுற்றோர் பிரிவில் இருந்த சிலரிடம் மனுக்களை வாங்கியவர் நேராக மாவட்ட கண்காணிப்பு அலுவலரான முகமது நஜிமுதீன் தலமையில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு சென்று விட்டார்.

     இதே நேரத்தில், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள பெரும்பாலான ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே சென்று விட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான ஊழியர்கள் இருக்கைகள் காலியாக இருந்தது.

வேகமாக செயல்படும் கலெக்டர், அவரிடம் மனு கொடுத்தால் நம்முடைய பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கையில் அவரிடம் மனு கொடுக்க வந்திருந்த ஆயிரத்துக்கும் அதிகமாக பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்படாத நிலையில் மதியம் 12.30-மணி வரை அலுவலக வாசலிலேயே கால் கடுக்க நிற்கவைக்கபட்டனர்.

பின்னர் மனுக்களை வாங்க ஒரு சில அதிகாரிகள் வந்தாலும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் மனுக்களை வாங்கிக்கொண்டு பொதுமக்களை அனுப்ப பெரும்பாடு பட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம் என்ற நம்பிக்கையில் வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

- பெ.சிவசுப்ரமணியம்

சார்ந்த செய்திகள்