கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் விஜயபுரம் என்ற பகுதிக்கு செல்லும் வழியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் விழா பேனரை அவரது ரசிகர்களான தொண்டர்கள் வைத்திருந்தனர். ஜீன் 25 ஆம் தேதி மாலையில் மழை பெய்வதற்கு முன்பாக பலத்த காற்று வீசியது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான விஜய் பிறந்த நாள் டிஜிட்டல் பேனர் காற்றின் வேகத்தில் நிற்க முடியாமல் கீழே சாய்ந்தது. டிஜிட்டல் பேனர் சாய்கின்ற போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மேல் விழுந்தது.
நல்வாய்பாக பேனர் சிறுவன் மீது விழுந்த போது அதே இடத்தில் ஒரு இரு சக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. சிறுவன் மீதும் இருசக்கர வாகனத்தின் மீதும் அந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தின் உதவியால் அந்த சிறுவனுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. டிஜிட்டல் பேனர் விழுந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அதை தூக்கி அதன் அடியில் சிக்கிக் கொண்ட சிறுவனை மீட்டனர். சிறுவன் காயங்கள் இன்றி வீட்டிற்கு சென்றான். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் தொடர்ந்து அதே இடத்தில் அகற்றப்படாமல் இருந்ததால் காற்றின் வேகத்தில் அது சாய்ந்து சிறு விபத்தை ஏற்படுத்தியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரில் அரசியல் கட்சி பேனர் ஒன்றில் கீழே விழுந்து ஒரு இளம் பெண் மரணத்தை சந்தித்தார் அதன் பின் பேனர் வைப்பதில் சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. டிஜிட்டல் பேனர் வைக்கப்படும் பொழுது, எந்தப்பகுதியில் வைக்கிறார்களோ அந்த பகுதியில் நகராட்சி, காவல்துறை, வருவாய் அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்று அதன் பின்பே வைக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எந்த அரசியல் கட்சிகளும் தனியார் அமைப்புகளும் பின்பற்றுவதே இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.