மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்புகள் அதிகம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திருத்தச் சட்டத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று மோடியும், அமித்ஷாவும் சொல்வதுடன் சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போராட்டம் வேகமெடுத்து வருகிறது.
நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை பல கோடி ரூபாய் பணத்தை வங்கிகளில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்தும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி பல நூதன போராட்டங்கள் நடந்து வரும் தஞ்சை மாவட்டம் ஆவணம் கிராமத்தில் தங்கள் போராட்டமும் பலருக்கு பலன் கொடுக்க வேண்டும் என்பதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் இளைஞர்கள் 50 பேர் குடியுரிமை திருத்தச் சடடத்தைத் திரும்பப் பெறு என்று ரத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட இளைஞர்களின் ரத்தத்தை தஞ்சை தனியார் ரத்த வங்கி பணியாளர்கள் பெற்றுக் கொண்டனர். ரத்தம் கொடுத்தும் போராடுகிறோம். ஆனால் மத்திய மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லையே என்கிறார்கள் இளைஞர்கள்.