Skip to main content

18 நாட்களில் உடைந்த பாலம்; சிக்கிக் கொண்ட மணல் லாரி - தப்ப வைக்கப்படுகிறாரா ஒப்பந்தக்காரர்?

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

A broken bridge on the 18th day; Stranded sand truck- Is the contractor being rescued?

 

தஞ்சை மாநகராட்சியில் 18 நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பாலத்தில் மணல் லாரி சென்றபோது பாலம் உடைந்து அதில் லாரி சிக்கிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இந்த சம்பவத்தில் லாரி உரிமையாளர், ஓட்டுநர் மீது புகார் கூறும் மாநகராட்சி தரமற்ற பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மீதான நடவடிக்கை என்ன என்பதை சொல்லவில்லை.

 

தஞ்சை மாநகராட்சி கீழவாசல் சிராஜுதீன் நகரில் மழைநீர் செல்ல அமைக்கப்பட்டிருந்த ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் பழுதடைந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வடிகால் அமைக்கும் பணியின் ஒன்றாக ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 18 நாட்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. இந்த பாலத்தின் வழியாக அப்பகுதி மக்களின் இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. 4 பள்ளிகள், ரேஷன் கடைக்கு என இந்தப் பாலத்தை கடந்தே செல்ல வேண்டும். புதிய பாலம் என்பதால் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்திருக்க வேண்டும் அதை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

 

A broken bridge on the 18th day; Stranded sand truck- Is the contractor being rescued?

 

இந்நிலையில் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று இந்தப் பாலத்தின் மீது சென்றபோது பாலம் உடைந்து அதன் பின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்து முன்பக்கம் தூக்கி அந்தரத்தில் நின்றது. அந்த லாரியில் இருந்த மணல் வேறு வாகனங்களில் மாற்றப்பட்ட பிறகு லாரி மீட்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாநகர மேயர் சண்.ராமநாதன், “கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்காத பாலத்தில் லாரி சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மீது தான் தவறு என்பதை லாரி உரிமையாளர் எழுதிக் கொடுத்திருக்கிறார். விரைவில் புதிய பாலம் கட்டி தருவார்” என்றார்.

 

அப்பகுதி மக்களும், எதிர்க்கட்சியினரும் தரமற்ற முறையில் பாலம் வேலை நடக்கிறது என்று புகார் சொன்ன போது மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பாலம் வேலை பார்க்கும் ஒப்பந்தக்காரர் பெயர் விபர பதாகை வைக்கவில்லை. கனரக வாகனங்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பதாகையும் இல்லை. இப்போது லாரி ஓனர், ஓட்டுநர் மீது வழக்கு போடும் மாநகராட்சி நிர்வாகம் தரமற்ற பாலம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது ஏன் புகார் கொடுக்க மறுக்கிறார்கள். விபத்துக்கு காரணமான தரமற்ற பாலம் கட்டிய ஒப்பந்தக்காரரை மாநகராட்சி காப்பாற்ற நினைக்கிறதா என்பது தெரியவில்லை. இதற்கு மாநகராட்சி தெளிவான பதில் கொடுக்க வேண்டும் என்றனர்.

 

18 நாளில் ஒரு பாலம் உடையுதுன்னா எவ்வளவு தரமான பாலமாக இருக்கும்?

 

 

சார்ந்த செய்திகள்