
த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடத்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கூலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. கடந்த மாதமே இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
அண்மையில் கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த டீசரில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா...’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனது அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் நானே. ஆனால், எனது உரிமை பெறாமல் என் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றம்” என இளையராஜா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.