சேலம் அருகே, சாலை ஒப்பந்ததாரருக்கு, ஒப்பந்தப்பணிக்கான 'பில்' தொகையை வழங்க, லஞ்சம் வசூலித்த ஊராட்சி மன்ற செயலாளர், கூட்டுறவு சங்க எழுத்தர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அமுதா. இவருடைய கணவர் ஜெயக்குமார் (வயது 48). இவர், தலைவாசல் கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை எழுத்தராக பணியாற்றி வருகிறார். என்றாலும், தேவியாக்குறிச்சியில் நடக்கும் ஊராட்சி மன்றப் பணிகளை மனைவி சார்பில் இவர்தான் மேற்கொண்டு வருகிறார்.
இதே ஊராட்சியில், சின்னசாமி (வயது 32) என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செந்தில்குமார் (வயது 42) என்ற ஒப்பந்ததாரர் இந்த ஊராட்சியில் சாலைப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். பணிகளை முடித்துவிட்ட அவர், அதற்குரிய 'பில்' தொகையைக் கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்து இருந்தார்.
'பில்' தொகையை வழங்க வேண்டுமானால், 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார், சின்னசாமி ஆகியோர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதற்கு செந்தில்குமார் அப்போது ஒப்புக்கொண்டாலும், தனக்கு சேர வேண்டிய பணத்தையே லஞ்சம் கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா? என மனதிற்குள் எண்ணினார். இதையடுத்து அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் செந்தில்குமாரிடம் ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தனர். அதன்படி, ரசாயன பவுடர் தடவிய தொகையைக் கொடுத்து, லஞ்சமாக கொடுக்கும்படி கூறினர். செப். 16ம் தேதி ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் சென்ற செந்தில்குமார், ஊராட்சிமன்ற செயலாளர் சின்னசாமி, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஜெயக்குமார் ஆகியோரிடம் கொடுத்தார்.
தாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையின் பொறியில் சிக்கப் போகிறோம் என்பதை அறியாத அவர்கள் செந்தில்குமாரிடம் இருந்து பணத்தை வாங்கினர். ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், பாய்ந்து சென்று அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
லஞ்ச வழக்கில் கைதான ஊராட்சி மன்ற செயலாளர் சின்னசாமியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவர் அமுதாவின் கணவர் ஜெயக்குமாரை, தலைவாசல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வேல்முருகன் பணியிடைநீக்கம் செய்துள்ளார். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.