Skip to main content

கஞ்சாவுக்கு அடிமையாகும் சிறுவர்கள்; சீர்காழியில் தொடரும் அவலம்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Boys addicted to cannabis

 

சீர்காழி பகுதியில் பள்ளிக்கூட சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீர்கெட்டுப் போகும் அவலம்  தொடர் கதையாகிவருகிறது.

 

சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது அதில், நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திட்டை பகுதியைச் சேர்ந்த தசரதன் மற்றும் திவ்யேந்திரன் ஆகிய இரண்டு சிறுவர்களையும் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சிலர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரனையில் அந்தச் சிறுவர்கள் கூறிய சம்பவம் பெற்றோர்கள் வட்டாரத்தைக் குலைநடுங்கச் செய்தது.

 

சிறுவர்களிடம் விசாரிக்கப்படும் அந்த வீடியோவில், "கஞ்சா குடிப்பதற்குப் பணம் இல்லன்னா கோவில் உண்டியலை உடைப்போம்" என்றும் "கடைசியா சீர்காழி அருகே உள்ள செம்மங்குடி காட்டுக் கோவிலில் உள்ள சாமியின் தாலியை அறுத்து எடுத்துட்டுவந்தோம், அதோட அங்கிருந்த உண்டியலையும் எடுத்துட்டு வந்தோம்," எனத் தெரிவிக்கின்றனர். 

 

மேலும், "எடுத்ததை எங்கு வச்சிருக்கீங்க எனக் கேட்டதற்கு? அதற்கு அந்தச் சிறுவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனைக்குப் பின்னாடி தட்சன் தெருவில் இருக்கும் எங்க ஃபிரண்ட் விக்கி, அரவிந்தனிடம் கொடுத்துவிட்டு கஞ்சா பொட்டலங்களை வாங்கிட்டோம்," என பாக்கெட்டில் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை காட்டுகின்றனர். இந்த வீடியோ அடங்குவதற்குள் சீர்காழி அடுத்துள்ள தைக்கால் சாமியம் பகுதியில் சிறுவர்கள் ஆறுபேர் ஒன்றாகச் சேர்ந்து வட்டமாக அமர்ந்து, அவர்கள் கொண்டுவந்திருந்த விலை மதிப்புடைய செல்ஃபோன்களை நடுவில் குவித்து வைத்துவிட்டு, கஞ்சா பொட்டலங்களை பிரித்துக் கொட்டி அதை நுனிக்கி கைத்தேர்ந்தவர்களையே மிஞ்சும் வகையில் புகைக்கும் காட்சி தற்போது வைரலாகிவருகிறது.  அந்தச் சிறுவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், பள்ளிச் சிறுவர்களாகவும் தெரிவது பெற்றோர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 

இதுகுறித்து, கஞ்சா குடியால் குடும்பத்தை இழந்து, குடியில் இருந்து மீண்ட வைத்தீஸ்வரன் கோயிலைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தோம், "மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள மாப்படுகையில் இருந்துதான் கஞ்சா சப்ளை ஆகுது. கஞ்சா விற்பனை செய்யும் அனைவருமே கல்லூரி மாணவர்களைப்போல தான் இருப்பாங்க. ஊருக்கு ஒரு இளைஞர்களை ஏஜென்ட் போல தேர்வு செய்து வைத்திருப்பாங்க. நம்பிக்கையான ஆளா இல்லன்னா கொடுக்க மாட்டாங்க. அதுவும் பள்ளி கல்லூரி சிறுவர்களைக் குறிவைத்துத் தான் கொடுப்பாங்க. எங்கள மாதிரி உள்ளவங்களுக்கு நம்பிக்கையான ஆள் மூலம் தான் கொடுப்பாங்க.

 

Ad

 

கஞ்சா குடிக்கு ஆலாகிட்டா மிருகத்தை விட மோசமான மன நிலைக்குப் போக வேண்டியிருக்கும். கஞ்சா குடியால என்னுடைய குடும்பமே வீதிக்குப் போயிடுச்சு. இன்னைக்கு நடுவீதியில் நிற்க, அந்த கஞ்சா தான் காரணம். கஞ்சாவிற்பது யாரு, எங்கே இருந்துவருது என எல்லாமே காவல்துறைக்குத் தெரியும். மணல்மேடு காவல்நிலையத்திற்கு பின்னாடியே விற்பாங்க, மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அருகிலேயே இருக்குது. சீர்காழி காவல் நிலையத்திற்கு எதிரே இருக்குது. புதுப்பட்டினம் பகுதியில நிறைய இடத்தில இருக்குது. பிள்ளைகளைப் பெற்றோர்கள் கவனமா பாதுகாக்கனும், இல்லன்னா, கஞ்சாவுக்காகப் பெரும் குற்றம் செய்யவும் தயங்கமாட்டாங்க," என்கிறார் ஆதங்கமாக.
 

 

 

சார்ந்த செய்திகள்