கரோனா கிருமியிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற பல்வேறு விழிப்புணர்வுகளை அரசாங்கமும், தன்னார்வலர்களும் செய்து வருகிறார்கள். ஓவியர்கள் தங்கள் பங்கிற்குச் சாலைகளில் ஓவியங்களைத் தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டார ஓவியர்கள் கடந்த ஒரு வாரமாக ஊர் ஊராகச் சென்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு வடிவம். ஒரு இடத்தில் வரைந்த ஓவியம் மற்றொரு இடத்தில் வரைவதில்லை.
இவர்களின் கைவண்ணத்தில் தீட்டப்படும் ஓவியங்கள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. புளிச்சங்காடு கைகாட்டி, வடகாடு சாலை ஓவியத்தை தொடர்ந்து கீரமங்கலத்தில் பிரமாண்ட சிவன் சிலையும் நக்கீரர் சிலையும் அமைந்துள்ள மெய்நின்றநாதர் ஆலயம் அமைந்திருப்பதால் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்படும் நெருப்பில் கரோனா கிருமிகள் கருகி உருகும் காட்சி வரையப்பட்டிருந்தது.
அடுத்து ஆலங்குடி பேருந்து நிலையத்தில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று தனது கொம்புகளால் கரோனா வைரஸ் கிருமிகளை குத்திக் கிழிப்பது போன்று வரைந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. அடுத்து மறமடக்கி கிராமத்தில், ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் குதிரை தாவிச் சென்று கிருமிகளை மிதிக்க குதிரையின் மேல் இருந்து வெளிப்படும் வேல் கிருமிகளை குத்தி அழிக்கும் காட்சியாக வரையப்பட்டிருந்தது. ஓவியத்தின் முன்னால் நின்ற உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் ஓவியத்தில் வைரஸை கொல்லும் ஓவியர்களைப் பாராட்டுகிறார்கள் மக்கள்.