
கரூர் அடுத்த அரசு காலனி பகுதியில் வசித்து வருகிறார் ரூபிதா பானு. இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்துவந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் என்பவருடன் ரூபிதா பானுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவி போல் வாழ்ந்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே பிரச்சனை பெரிதாகியுள்ளது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பானுவை அடித்து கீழே தள்ளி உள்ளார். அப்போது கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட, ரூபிதா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே ராஜேந்திரன் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தப்பித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரூபிதா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பிச்சென்ற ராஜேந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.