நேற்று சென்னையில் நடைபெற்ற 'கமல் 60' நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எங்களின் கொள்கைகள், சித்தாந்தங்கள் மாறலாம். ஆனால் எங்கள் இருவரின் நட்பு எப்போதும் தொடரும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வராவார் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அதுபோல தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆளுநரை சந்தித்த பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
யார் வேண்டுமானாலும் அதிசயத்தை, அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கலாம் ஆனால் நாங்கள் நம்புவது மக்களை. மக்கள்தான் இறுதி எஜமானர்கள். முக்கியமாக 2021ல் மீண்டும் ஒரு அதிசயத்தை கொண்டுவர போகிறார்கள் அது மீண்டும் அதிமுக ஆட்சி என்பதுதான். இந்த அதிசயத்தைதான் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார் போல.
அதிமுகவையே தொடர்ந்து இவர்கள் விமர்சிக்க காரணம் பழுத்த மரம்தான் கல்லடி படும். இன்று யாராக இருந்தாலும் சரி எங்களை தொட்டால்தான் பெரிய பிம்பமாக வெளியே தெரிவார்கள். நாங்கள் பெரிய இடத்தில இருப்பதால் எங்களை மையப்படுத்தி பேசினால்தான் வளர முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது எனவேதான் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதனால் அவர்கள் தூரம்தான் போகமுடியும் தவிர எங்கள் பக்கம்கூட வரமுடியாது.
எந்த அதிசயமும் நடக்காது, அதிர்ஷ்டமும் நடக்காது. அதிர்ஷ்டமும், அதிசயமும் நாங்கதான் எல்லாம். நண்பர் கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். 6 சதவிகித வாக்குகளை பெற்று அவருடைய சக்தியை காட்டிவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் இப்போ வருகிறேன் அப்போ வருகிறேன் என்று அரசியல் சமுத்திரத்தில் குதிக்கலாமா? வேண்டாமா? என்ற மைண்ட் தாட்டில் இருக்கிறார். முதலில் ரஜினிகாந்த் அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும் பிறகு ஒன்றாக சேரட்டும். அதன்பிறகு அவர்கள் என்னமாதிரியான கருத்துக்கள், கொள்கைகள் போன்றவற்றை மக்களிடம் முன்வைக்கிறார்கள் என்பதில்தான் எங்கள் தரப்பு கருத்துக்கள் வெளிப்படும். இது சரியான நேரம் அல்ல. எத்தனை பேர் ஒன்று சேர்த்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என்றார்.