குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், சட்டத்தைத் திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவருகிறது.
இதனால் தொடர் போராட்டங்கள் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. நூதன போராட்டங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. வேறு எந்தப் போராட்டத்திற்கும் இல்லாத அளவில் இஸ்லாமிய பெண்கள் குழந்தைகளுடன் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் அனைத்து போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பதுடன், பொதுக் கூட்டங்களும் நடத்தி வருகின்றனர். ஏப்ரல் மாதத்தில் மாநாடுகளும், உப்புச் சத்தியாகிரகம் தொடங்கிய நாளில் மீண்டும் அதே வழித்தடத்தில் திருச்சி முதல் வேதாரண்யம் வரை சமூக நீதியை மீட்க நடைபயணத்திற்கும் அனைத்துக் கட்சியினரும் தயாராகி வருகின்றனர்.
சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தயங்கி வரும் தமிழக அரசு போராட்டக் காரர்களை சமாதானம் செய்யும் விதமாக இந்த திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு சொல்கிறது என்று சொல்லி வருகிறது. இதனை மீண்டும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர்களிடம் விளக்க கலந்துரையாடல் சந்திப்புக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் நாளுக்கு நாள் போராட்டங்களில்.. சிறைக் கம்பிகளுக்குள் இளைஞர்கள், முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கப்பட்ட முகாம்கள் என தொடங்கிய நூதனப் போராட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்குகளை முடித்துக் கொள்வது. வங்கியில் இருந்து பணத்தை எடுப்பது போன்ற போராட்டங்களில் ஆயிரம் ஆயிரமாக கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தொடர் போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியதுடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊராட்சி குப்பைத் தொட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு திருத்திய சட்டத்தை திரும்ப பெறும் வரை இதே போல அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும் என்றனர் போராட்டக்குழுவினர்.