இந்தியாவிற்காகப் பேசுவோம் (Speaking for INDIA) என்ற தலைப்பில் தேசிய அளவில் பல்வேறு மொழிகளில் பாட்காஸ்ட் வாயிலாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று (31.10.2023) மூன்றாவது தொடரை (Episode – 3) இன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த 2வது எபிசோடில் சிஏஜி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட பாஜக அரசின் 7 மெகா ஊழலைப் பற்றிப் பேசி இருந்தேன். அது எல்லாம் உண்மை என மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் விதமாக ஒரு விசயத்தை செய்துள்ளனர். இந்தியா முழுவதும் இந்த ஸ்பீக்கிங் பார் இந்தியா பேச்சு ரீச் ஆன பிறகு, அக்டோபர் 2வது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. அது என்னவென்றால் பாஜக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வந்த சிஏஜி அதிகாரிகள் செப்டம்பர் 12 ஆம் தேதியே கூண்டோடு மாற்றம் என்ற செய்தி அது. எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று பார்த்தீர்களா.
இந்த முறை பேசப்போவதை உடனடியாக கொடுக்கிறார்களா என்று பார்ப்போம். இந்த எபிசோட்டில் பேசப்போவது மாநில உரிமைகள் பற்றித்தான். திமுக தனக்கென்று தனித்துவமான கொள்கைகளுடன் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் கட்சி மட்டும் அல்ல. இன்று நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக இருந்து இந்திய ஜனநாயகத்தைக் காக்கப் போராடும் கட்சியும் கூட. அப்படிப்பட்ட திமுகவின் கொள்கைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி.
இந்தியா என்பதே கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். நம் மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் இருக்கின்றன. பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அவர்களுக்கென அரசியல் சட்ட உரிமைகள் இருக்கிறது. இத்தனை வேறுபாடுகளை கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். அதனால் தான் நம் நாட்டின் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள் ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி நெறிமுறை கொண்ட நாடாக மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள்.
பிரதமர் மோடி இதற்கு முன்னால் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போது எல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார். பிரதமராகி டெல்லிக்கு வந்தவுடன் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது. அந்த வரி என்னவென்றால் இந்தியா என்ற பாரத் மாநிலங்களின் ஒன்றியம் என்பது. முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அதை பறிக்க முயல்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மாநிலங்களை ஒழிக்க வேண்டும். மாநிலங்களை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என நினைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.