Skip to main content

பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 100 பேர் கைது

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன் சந்தை போக்குவரத்து இடையூறாகவும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாகவும் இருப்பதாக கூறி அதனை உடனடியாக அகற்றக் கோரியும் பாஜக சார்பில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த போராட்டத்திற்கு எதிராக சில அமைப்புகளும் போராட்டம் அறிவித்தனர். இதனால் முத்துப்பேட்டை இரு தரப்பினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசார் இரு தரப்பினரின் அனைத்து போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தடை செய்தனர். இருந்தும் போராட்டங்கள் அறிவிப்பதும் பின்னர் தடை செய்வதுமாக தொடர்ச்சியாக பரபரப்பான சூழ்நிலை உருவானது. 

 

 

 

இந்தநிலையில் 20 ந் தேதி மீன் சந்தையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் சாகும்வரை உண்ணாவிரத  போராட்டத்தை அறிவித்தனர். மேலும் இந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லும் பா.ஜ.க போராட்டம் நடத்துவது நகைப்பிற்குறியது என்றும்.. சாகும் வரை உண்ணாவிரதமா அல்லது சாக்கு போக்கு சொல்லி நிறுத்துவதா? என்ற கேள்வியை மாலை முரசு சப் எடிட்டரான அதிராம்பட்டினம் நூருல் அகமது தனது முகநூல் பக்கத்தில் எழுதினார். அதனால் மாவட்டத் செயலாளர் மாரிமுத்து கொடுத்த புகாரில் நூருல் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

 

 

 

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படும் என்றும் அறிவித்ததுடன் போலீசாரையும் குவித்துள்ளனர். இந்த நிலையில் எச்.ராஜா முத்துப்பேட்டை வரவில்லை. போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பினரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் உடன் பாடு ஏற்படவில்லை. அதனால் பாஜக சார்பில் திட்டமிட்டப்படி இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு பாஜக வினர் தயாராகினர். இதனையடுத்து முத்துப்பேட்டையில் திருவாரூர் எஸ்பி மயில்வாகனன், ஏடிஎஸ்பி ஜான்ஜோசப், முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், நன்னிலம் டிஎஸ்பி அருண் உள்ளிட்ட ஐந்து டிஎஸ்பிக்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று காலை திடீரென்று முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஜாம்புவானோடை கிராமத்தில் உள்ள பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அதபோல் பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா தலைமையிலான போலீசார் பேட்டை கிராமத்தில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அதே போல போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த பா.ஜ.க வினர் சுமார் 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் உண்ணாவிரதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்