தமிழகத்தில் பொங்கல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், இன்று (11.01.2021) திருச்சியில் சகாய மாதா கோவிலில் பொங்கல் விழாவைக் கொண்டாடவந்த காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், நத்தர்ஷா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், ''முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான அதிமுக-பாஜகவுக்கு இடையிலான சர்ச்சையில், மத்தியில் ஆளும் மைனாரிட்டி பாஜக, முதல்வர் வேட்பாளரை தேர்வுசெய்ய முடியாது. அப்படித் தேர்வு செய்தால் அது சர்வாதிகாரப் போக்கு.
தொடர்ந்து, ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்துவது அவருடைய மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகால நண்பரான அவர் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாகக் கூறிய பிறகும் அவரை வலுக்கட்டாயமாக இழுப்பது என்பது வேதனைக்குரிய காரியம். அரசியலை விட உடல்நலம் மிக முக்கியம் என்பதை அவர் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்திருக்கிறார். அவரை யாரும் வற்புறுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில் மன்றத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளிலும், குளறுபடிகளிலும் நான் சக நண்பராக அவரோடு இருந்தேன். தற்போது அவருடைய உடல்நலத்தில் எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. எப்போதும் நான் அவரோடு இணைந்து நிற்கிறேன்.
வருகின்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை திமுகவோடு காங்கிரஸ் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் கண்டிப்பாக விவாதித்து முடிவு எடுப்போம்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழைப் புறக்கணித்துக் கொண்டே இருக்கிறது. எந்தத் தேர்வாக இருந்தாலும் அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு ஒரு பெரிய தடையாக இருந்துவருகிறது. குறிப்பாக தமிழகத்தை மத்திய அரசு ஒதுக்கிக் கொண்டே இருக்கிறது. இது ஒரு சர்வாதிகாரப் போக்கு'' என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இருவரும் ஊழல் பட்டியல் வெளியிட்டிருந்த நிலையில், திமுகவோடு மக்கள் நீதி மய்யம் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியபோது, ''இந்த கேள்விக்கு கமலஹாசன் தான் பதில் சொல்லவேண்டும்'' என்றார்.