நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இத்தகைய சூழலில் கோவை மாவட்டம் சிங்காநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளைம் 28வது வார்டு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று (11.04.2024) இரவு 10.40 மணியளவில் பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கூறுகையில், “கோவையில் இதுவரை போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் இது போன்று சட்டவிதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை. திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கிய பாஜகவைச் சார்ந்த ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.