திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனைக் குழு தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தொழிலதிபர் ஏ.ஜெ. சேகர் ரெட்டி சென்னை தியாகராய நகர் பெருமாள் கோயிலில் பதவியேற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் ரெட்டி, “இன்று 2வது முறையாக என்னை சென்னை தேவஸ்தான கோயில் அறங்காவல் குழு தலைவராக ஆந்திர முதல்வர் அறிவுறுத்தல்படி திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் தலைவராக இருந்தபோது பக்தர்களுக்கு சேவை செய்தேன். 13 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த பத்மாவதி தாயார் கோயில் அடிக்கல் பிப்ரவரியில் நாட்டப்பட்டது. ஓர் ஆண்டில் கோயில் பணி நிறைவுற்று குடமுழுக்கு நடைபெறும்.
ஆந்திராவில் 11ஆம் தேதி பசுவிற்கான கோயிலை பக்தர்கள் பயன்பாட்டிற்கு ஜெகன்மோகன் ரெட்டி திறந்துவைக்கிறார். உலகளவில் இது பிரசித்தி பெறும். திருப்பதி செல்லும் தமிழக பக்தர்களுக்கு வழியில் ஏற்படும் சிரமங்களைப் போக்க 25 முதல் 30 கிலோமீட்டர்க்கு இடையில் இலவச தங்கும் விடுதிகள் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட உள்ளன. பக்தர்கள் இங்கு தங்கி சமைத்துச் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து பயணிக்கலாம்.
திருப்பதி போன்ற பெரிய கோயில் தமிழகத்தில் கட்டப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கை. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களைத் தேவஸ்தானத்திற்கு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். தேவஸ்தான இடத்தில், ராயப்பேட்டையில் இலவச திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். சோழிங்கநல்லூர் உட்பட கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை ஆகிய இரண்டு இடங்கள் கோயில் கட்டுமான பணிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி பிரம்மாண்டமாக இருக்கிறது. சேகர்பாபு, ஆக்கிரமிப்பு நிலங்களைப் பிரம்மாண்டமாக மீட்டுவருகிறார்.
என் மீதான டைரி புகார் குறித்து 2016-லே நான் சொல்லிவிட்டேன். அது ஒரு கற்பனை, யாரோ சிலர் இவ்வாறு சொல்லிவருகின்றனர். நாம் பதவிக்கு வந்தால் இதுபோன்ற புகார்கள் வருவது இயல்புதான். எனக்குத் தெய்வ சக்தி இருப்பதால் மனித சூழ்ச்சி என்னிடம் பலிக்காது. ரெட்டி என என் ஜாதியைப் பெயரில் சேர்க்க வேண்டாம் என்றே கூறுகிறேன். என் பெயர் சேகர் என்றே ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் உள்ளது” என்று கூறினார்.
முன்னதாக ஏ.ஜெ. சேகர் எனும் சேகர் ரெட்டிக்கு அறங்காவலர் குழுத் தலைவராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு, ஆங்கிலத்தில் பேசிய திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, “புரட்டாசி மாதம், தமிழ்நாட்டிலிருந்து திருப்பதிக்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு, உணவுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சென்னையில் பாலாஜி கோயில் கட்ட ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விரைவில் அனுமதி தர வேண்டும். கரோனா காரணமாக தற்போது 15 ஆயிரம் வரையிலான மக்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்கிறார்கள். 3வது கரோனா அலை வரவில்லை எனில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்” என்று கூறினார்.