இரவு 7 மணிக்கு, விருதுநகர் மாவட்டம், பிளவக்கல் டேம், விருந்தினர் மாளிகை பக்கம் சென்ற ரசூல்தீன், ராமச்சந்திரன், தெய்வேந்திரன் ஆகிய மூவரும், திடுதிப்பென்று கரடி ஒன்று எதிரே வந்ததைப் பார்த்து பீதியில் அலறினார்கள். அந்தக் கரடி ரசூலைத் தாக்கியதில், வலது மார்பில் சிராய்ப்பு, வலது கை மணிக்கட்டு, வலது கால் முட்டிக்கு கீழ் காயங்கள் ஏற்பட்டன. இதைக்கண்ட ராமச்சந்திரனும் தெய்வேந்திரனும் பதற்றத்துடன் கத்தினார்கள். இவர்களின் அலறலைக் கேட்டு, கரடி ஓடிவிட்டது. அதிர்ச்சியில் கீழே விழுந்த ராமச்சந்திரனுக்கு இடது கால் முட்டியில் சிராய்ப்பினால் காயம் உண்டானது.
கரடி கடித்த காயங்களுக்காக, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில், ரசூல் சிகிச்சை பெற்று வருகிறார். புறநோயாளியாக சிகிச்சை பெற்றுவிட்டு, ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கூமாபட்டி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டுப் பகுதியிலிருந்து, கரடி ஒன்று அடிவாரத்துக்கு இறங்கி வந்து, மனிதர்களைக் கடித்துவிட்டு ஓடியது, அந்த கிராமத்தினரிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.