Skip to main content

போலீசாரை காலணியால் அடிக்க முயன்ற பார் உரிமையாளர்!

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

bar owner tried to hit the police with a shoe in Pudukottai

 

டாஸ்மாக் கடையில் அனுமதி இல்லாமல் பார் நடத்தி காலை நேர மது விற்பனையில் ஈடுபட்ட நபரைப் பிடித்த போலீசார், வாகனத்தில் ஏற்றும்போது அங்கு வந்த பார் உரிமையாளர் போலீசாரை காலணியால் அடிக்கப் பாய்ந்த காணொளி வைரலாகப் பரவி வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 140 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் 60 டாஸ்மாக் கடைகளில் மட்டுமே பார் அனுமதி பெற்று செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மீதி 80 டாஸ்மாக் கடைகளில் அனுமதி பெறாமல் பார்கள் இயங்கி வருகிறது. இந்த பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனையும் நடக்கிறது. ஆனாலும் யாரோ சிலர் அனுமதி பெறாத டாஸ்மாக் கடைகளிலும் வசூல் செய்து வருகின்றனர். இது டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் தெரிந்தே நடப்பதாகக் கூறுகின்றனர். தற்போது டாஸ்மாக் பார்களில் மது விற்பனையைத் தடுப்பதற்காகக் கடந்த சில நாட்களாக தனிப்படை போலீசார் பார்களில் சோதனை செய்து வருகின்றனர்.

 

நேற்று காலை ஆலங்குடி சப்டிவிசன் வடகாடு காவல்நிலைய எல்லையில் உள்ள வானக்கண்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இயங்கும் அனுமதி பெறாத பாரில் காலை 9 மணிக்கே மது விற்பனை நடப்பதை அறிந்து, ஆலங்குடி டிஎஸ்பி தனிப்படை போலீசார் முத்துக்குமார் மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தபோது அங்கு மது விற்ற வானக்கண்காடு திருப்பதி மகன் பரிமளம் (49) என்பவரை பிடித்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிய போது அங்கு தனது மகன் சின்ராஜ் உடன் வந்த மாஜி ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக பிரமுகருமான அனுமதி பெறாத பார் உரிமையாளர் மதியழகன், போலீசார் மோட்டார் சைக்கிளில் ஏற்றிய பரிமளத்தை விடுவிக்க இழுத்ததுடன் போலீசார் விடாததால் காலணியை கழற்றி அடிக்கப் பாய்ந்துள்ளார்.

 

அதையும் மீறி போலீசார் பரிமளத்தை கைது செய்து வடகாடு காவல் நிலையம் கொண்டு வந்தனர். அனுமதி பெறாமல் பார் நடத்தியதுடன், கள்ளத்தனமாக மது விற்ற தனது ஆதரவாளரை போலீசாரிடம் இருந்து மீட்க போலீசாரையே அடிக்கப் பாய்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டும் இதே திமுக பிரமுகர் மதியழகன் போலீசாரை அடிக்கப் பாய்ந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்