Skip to main content

“அதிமுக கொடி, பெயர், சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ்ஸுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்” - உயர்நீதி மன்றம் உத்தரவு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The ban on OPS from using AIADMK flag name and symbols will continue High Court orders

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜனவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Resign the post and let politics talk  E.P.S. Emphasis

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவை விதி 56இன் கீழ் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார். இருப்பினும். விதியை பின்பற்றி பேசினாலும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தர மறுக்கிறார். சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்னையின் ஆழத்தை கருதி சபாநாயகர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும். 

Resign the post and let politics talk  E.P.S. Emphasis

கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து அவையில் எதிர்க்கட்சி பேசுவதை ஆளும்கட்சி விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும்?. சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என சபாநாயகர் கூறுவது தவறு. மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர்.

கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் என செயல்படுகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“அதிமுக வீண் விளம்பரம் தேடுகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் விளாசல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
CM MK Stalin says ADMK is looking for advertisement

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள்  காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

இது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கைய சபாநாயகர் அப்பாவு எடுத்துள்ளார்.

சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

சபாநாயகரும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு”எனத் தெரிவித்தார்.