விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல்முருகன் (40). தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்த புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய சிறப்பு பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம், நந்தம்பட்டி ஆர்.சி. தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கிரேஸி (29) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோஸி ஏஞ்சல் (4) என்ற மகன் உள்ளார். முருகனின் சொந்த அக்காள் மகள்தான் கிரேஸி.
![bad incident in viruthunagar due to illegal affair](http://image.nakkheeran.in/cdn/farfuture/NeKj2UDmkraoguEiVj9qfrFvfVKw-TWiNI9OFc5llGE/1562687082/sites/default/files/inline-images/01_9.jpeg)
இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கிரேஸி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையில் வடிவேல்முருகனுக்கும், அருப்புக்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பிரியா (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. பிரியா ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்தானவர். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
![bad incident in viruthunagar due to illegal affair](http://image.nakkheeran.in/cdn/farfuture/SdOsmS3hdj0LKmE5jQ_jWwJ7WMebVLe3vhRCRH7IQVo/1562687262/sites/default/files/inline-images/03_16.jpg)
இதையடுத்து வடிவேல்முருகனும், பிரியாவும் புதூர் ஜவகர்லால் நேரு தெருவில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். வடிவேல்முருகன் இங்கிருந்து தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த விவகாரம் கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் என்ற ஆஸ்டினுக்கு (27) தெரியவந்தது. இதையடுத்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று மதியம் வடிவேல்முருகன் பணியாற்றிய புதூர் பள்ளிக்கு சென்ற ஆஸ்டின், அவரை செல்போனில் அழைத்தார். அவர் வெளியே வந்த உடன் கிரேஸியை பிரிந்து வாழ்வது தொடர்பாக பேசினார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆஸ்டின் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேல்முருகனை குத்திக் கொலை செய்தார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
![bad incident in viruthunagar due to illegal affair](http://image.nakkheeran.in/cdn/farfuture/QMmzuG6jl0TCto7CyyNdKJeUhCHmD6mZZtu80MnDli8/1562687307/sites/default/files/inline-images/02_29.jpg)
தகவல் அறிந்து புதூர் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சென்று வடிவேல்முருகன் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர், ஆஸ்டினை கைது செய்தனர். அவர், போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்...
“நான் தர்மபுரியில் உள்ள கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். எனது அக்காள் கிரேஸி நன்றாக வாழவேண்டும் என்பதாற்காக சொந்த தாய்மாமனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ஆனால் அவரோ திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே அக்காளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கிரேஸியுடன் குடும்ப நடத்த மறுத்துவிட்டார். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மேலும் வடிவேல்முருகன், பிரியா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவளுடன் குடும்பம் நடத்திய வருவதாக எங்களுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக நான், வடிவேல்முருகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் அவர், கண்டுகொள்ளவில்லை. மாறாக அந்த பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
![bad incident in viruthunagar due to illegal affair](http://image.nakkheeran.in/cdn/farfuture/_S2zRrZnR-otnHJnNcJ1cQP2Odp9eRtxAUKtQ2o2Rq4/1562687318/sites/default/files/inline-images/01_18.jpg)
இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக நேற்று மதியம், வடிவேல்முருகன் வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்றேன். பின்னர் அங்கு வெளியில் நின்று கொண்டு அவருக்கு போன் செய்து அக்காள் விவகாரம் தொடர்பாக உங்களிடம் பேசவேண்டும் என்று கூறினேன். அவர் வெளியில் வந்தார். அப்போது வடிவேல்முருகனிடம், நடந்தது நடந்து போச்சு, நீங்கள் சொந்த தாய் மாமன் என்பதால் தானே உங்களுக்கு கிரேஸியை திருமணம் செய்து கொடுத்தோம். இப்படி செய்தால் எப்படி, அந்த பெண்ணை விட்டு விட்டு கிரேஸியுடன் வாழுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், பிரியாவை எல்லாம் அப்படி விட்டுவிட முடியாது. வேண்டுமென்றால் உன் அக்காளையும் அனுப்பிவை, அவளையும் சேர்ந்து வைத்து குடும்பம் நடத்துகிறேன் எனறு கூறினார். அவரை சரமாரியாக குத்திக்கொலை செய்தேன்.”
கைதான ஆஸ்டின் கோர்ட்டில் ஆஐர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காலைப்பிடித்து கதறியும் கருணை காட்டாத கொலையாளி!
ஆஸ்டின், வடிவேல்முருகனை கத்தியால் குத்திக்கொலை செய்யும் போது அந்த பகுதியில் ஏராளமானோர் இருந்தனர். ஆஸ்டின் முதலில் வடிவேல்முருகனின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவர், ஆஸ்டினின் காலை பிடித்துக் கொண்டு தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் ஆஸ்டின் அதனை காதில் போட்டுக் கொள்ளாமல் குத்திக்கொன்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமானோர் அதனை செல்போனில் படம் படிப்பதிலேயே குறியாக இருந்தனர். அவரை யாரும் காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை. கம்பு, கல் என எதையாவது எடுத்து ஆஸ்டின் மீது வீசி இந்த கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் பயத்தில் அனைவரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை இந்த காட்சி சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இதனைப்பார்த்து, பலர் செல்போன் மோகத்தால் மனிதநேயம் மரத்துப் போச்சு என்று புலம்பினர்கள்.