கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த மாளிகைமேடு பகுதியில் வசித்து வந்தவர்கள் சுரேஷ் அமலா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் அடிக்கடி சுரேஷ் வரதட்சணை கேட்டும், குழந்தை சிவப்பாக உள்ளதால் மனைவியான அமலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டும் சண்டையிட்டும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அமலா நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது 5 மாத குழந்தையின் அழுகுரல் மட்டும் கேட்க படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார் அமலா. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அமலாவின் உடலை மீட்ட போலீசார் அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான சுரேஷை போலீசார் தேடிவந்த நிலையில் காவல்நிலையத்தில் சரணடைந்த சுரேஷ் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தில் ஆத்திரத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான். அதனையடுத்து போலீசார் அவன் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.