எத்தனை முறை கைது செய்து சிறையில் அடைத்தாலும், ஜாமினில் வெளியே வந்தபோதெல்லாம் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சிறைப்பறவையை இரண்டாவது முறையாக சேலம் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மணியனூர் பொடாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவருடைய மகன் பிரகாஷ் (28). இவர், கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், நெத்திமேட்டு பகுதியில் கணவரை பிரிந்து வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி, தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், 20.11.2017ம் தேதி, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே ஒருவரை மிரட்டி செல்போன் பறித்த வழக்கும், 9.7.2018ம் தேதி, பொடாரன்காட்டில் டேவிட் என்பவரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கும், 22.10.2019ம் தேதி, அல்லிக்குட்டை காலனியில் மணிகண்டன் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற வழக்கும் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. இவ்வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், ஜாமினில் விடுதலை ஆகி வெளியே வந்தபோதெல்லாம், மீண்டும் மீண்டும் அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பிரகாஷை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கான ஆணை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிடம் கடந்த 18ம் தேதி நேரில் சார்வு செய்யப்பட்டது. இவர், ஏற்கனவே 2017ம் ஆண்டில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாகவும ¢குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.