Skip to main content

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Attention those who have applied for the secondary teacher exam

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரினர். அதனடிப்படையில் இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி 15.03.2024 இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Attention those who have applied for the secondary teacher exam

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு வரும் 21 ஆம் தேதி (21.07.2024) அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 26 ஆயிரத்து 510 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இன்று (02.07.2024) முதல் அவர்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வாரக் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்