
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், மதுரவாயல், நசரத்பேட்டை ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ரவுடி கும்பல் ஒன்று பல்வேறு கடைகளில் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று நேற்று இரவு 3 பேர் கொண்ட கும்பல் சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது முட்டை தோசை கேட்டபோது இது சைவ ஹோட்டல் என ஹோட்டல் ஊழியர்கள் பதிலளித்துள்ளனர். பின்னர் சாப்பிட்டு விட்டு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட பொழுது மூன்று பேரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுதாகர் என்ற நபர் கையில் இருந்த பட்டா கத்தியை எடுத்து ஹோட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார். இதனால் ஹோட்டல் உரிமையாளருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல் மதுரவாயல், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களுக்கு சென்ற இக்கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிவிட்டு பணத்தைப் எடுத்து சென்றுள்ளனர். ஒரேநாள் இரவில் அம்பத்தூர், மதுரவாயல், நசரத்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகளுக்கு சென்று இதேபோல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் செம்பரம்பாக்கம் சுடுகாட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், சசிகுமார், முத்து ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடைகளில் தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல் வடமாநில இளைஞர் ஒருவரை தாக்கி செல்போன் பறித்தது; பணம் பறித்தது உள்ளிட்ட வழிப்பறி செயல்களில் இவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து கத்தி, ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.