தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்துவரும் நிலையில் இன்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''மதுரை மக்கள் 20 லட்சம் பேர் இருக்கோம். ஆனால் சிறந்த பொழுதுபோக்கு இடமே மதுரையில் இல்லை'' என சிரித்துக்கொண்டே அமர்ந்தார். அப்பொழுது இதுதொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிப்பார் என சபாநாயகர் தெரிவிக்க, உடனே எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''பேரவை தலைவர் அவர்களே மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜு என்பது நாட்டுக்கே தெரியும்'' என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
ஏற்கனவே சட்டப்பேரவையில் 'மதுரை சித்திரை திருவிழாவில் அணில் நுழையாதபடி தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று செல்லூர் ராஜு பேசிய பேச்சுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்' என கலாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.