திண்டுக்கல்லில் உள்ள மிகப் பிரசித்திபெற்ற பழனி முருகன் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 'முழுவதும் ஆக்கிரமிப்பு இல்லாத அளவிற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் பழனி கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது. பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகள் இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. அதேபோல் பிளாஸ்டிக் மற்றும் குட்கா விற்பனைக்கு முழுமையாக அங்கு தடை விதிக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்து வரும் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த இடத்தில் தமிழக அரசு தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக பொருட்களை பறிமுதல் செய்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்த வட மாநில இளைஞர்கள் மற்றும் மக்கள் ஆய்வுக்காக சென்ற அதிகாரிகளை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.