Skip to main content

மோடி ஒரு சர்வாதிகாரி; எடப்பாடி ஒரு உதவாக்கரை! மு.க.ஸ்டாலின் 'பொளேர்'!!

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரியாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவாக்கரையாகவும் செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

 

 

வரும் மக்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் ஏப்ரல் 12ம் பரப்புரை செய்தார். முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 

dmk

 

நமது கூட்டணி போட்டியிடும் இடங்களில் சிறப்பான வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும். நான் என்னுடைய பயணத்தை கடந்த 20ம் தேதி திருவாரூரில் தொடங்கினேன். இந்த நிலையில், இந்த மேடையில் அமர்ந்து இருக்கக்கூடிய ராகுல்காந்திக்கு நான் ஒரு உறுதிமொழியை சொல்ல விரும்புகிறேன்.

 

 

நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பதுதான். நமது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ராகுலை இளம் தலைவர் என அழைப்பதைவிட இளம் பிரதமர் என அழைப்பது சரியாக இருக்கும். முதன்முதலில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என அறிவித்து நான்தான். நேரு குடும்பத்தின் வாரிசாக நீங்கள் வந்து இருக்கிறீர்கள். நீங்கள் நீடித்த நல்லாட்சி தர வேண்டும். 

 

 

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியால் பல்வேறு கொடுமைகளை மக்கள் சகித்துக்கொண்டு இருக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கக்கூடிய மக்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்ட உடனே டெல்லிக்கு பறந்து வந்து உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மாலையிட்டு பாராட்ட வேண்டும் என கருதினேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், திராவிட இயக்கக் கொள்கைகளை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. திமுக தேர்தல் அறிக்கை ஹீரோவாகவும், காங்கிரஸ் தேர்தல் அறிக்¬ சூப்பர் ஹீரோவாகவும் உள்ளது. பாஜக தேர்தல் அறிக்கை ஜீரோவாக உள்ளது.

 

dmk

 

மத்திய அரசால் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை எப்படி மாநிலத்தில் இருக்கக்கூடிய கட்சி சொல்லலாம் என சிலர் விமர்சனங்கள் செய்தனர். ஸ்டாலின் என்ன பிரதமராக வரப்போகிறாரா? என கேட்கிறார்கள். நாம் கைகாட்டக்கூடிய ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கையில், தேர்தல் அறிக்கையில் சேர்த்து வெளியிட்டோம். ராகுல்தான் பிரதமராக வந்து அமரப்போகிறார். அந்த துணிச்சலில்தான், நம்பிக்கையில்தான் தேர்தல் அறிக்கையில் சேர்த்து வெளியிட்டு இருக்கிறோம்.

 

 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், ஜிஎஸ்டி வரி எளிமையாக்கும் திட்டம், தமிழக மீனவர் பிரச்னை தீர்க்கப்படும், கல்வி மாநிலப்பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில உரிமை பற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்க்கும்போது எனக்கு மிகப்பெரிய கவலை வந்தது. இதைப் பார்த்து ரசிக்க, மகிழ்ச்சி அடைய அண்ணா, கருணாநிதி இல்லையென்ற கவலைதான். அவர்கள் இருந்திருந்தால் ராகுல்காந்தியை உச்சி முகர்ந்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருப்பார்கள்.

 

 

தமி-ழகத்தில் கொடுமையான ஆட்சியும், மத்தியில் அசிங்கமான ஆட்சியும் நடக்கிறது. மோடி ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறார். இதேபோல எடப்பாடி உதவாக்கரையாக எதற்கும் உதவாத ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார். இந்த ஆட்சியை நாம் அகற்ற வேண்டும். பாஜக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை பட்டியல் இட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரும்போது என்னென்ன பணிகளை செய்யப்போகிறோம் என்பதை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். கனவு கண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எல்லாம் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள். 

 

 

மோடியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்து கிழித்து இருக்கிறீர்கள் என தெரிவித்து இருக்க வேண்டும். முதலில் நாங்கள் மக்கள் தேவையை நிறைவேற்றினோம். இனி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போகிறோம் என கூறுகிறார்கள். மக்களின் விருப்பம் என்ன தெரியுமா? மோடி உடனடியாக பதவியில் இருந்து இறங்கி வீட்டுக்குப் போக வேண்டும். அதை மோடி நிறைவேற்றினால் ஆயிரம் கும்பிடு போடுவதற்கு தமிழக மக்கள் அல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவரும் காத்திருக்கிறார்கள். 

 

 

எடப்பாடியிடம் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் ஊர் ஊராகச்சென்று என்ன சொல்கிறார்... நான் ஆடு வளர்த்தேன். மாடு வளர்த்தேன். கோழி வளர்த்தேன். நானும் விவசாயி என்று கூறுகிறார். விவசாயி நாட்டை ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்று ஊர் ஊராகச் சொல்கிறார். விவசாயி நாட்டை ஆளலாம். ஆனால் விஷ வாயு நாட்டை ஆளக்கூடாது. 

 

 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

 

பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்