வேலூர் அருகே ஆதிக்க சாதியினர் செல்ல அனுமதிக்க மறுத்ததால், இறந்தவரின் உடலை பாலத்தில் கயிறுகட்டி இறக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி கிளப்பிய பரபரப்பே இன்னமும் ஓயவில்லை. அதற்குள் மதுரையில் வெடித்திருக்கிறது மற்றொரு சாதி ஒடுக்குமுறை விவகாரம்.
மதுரை மாவட்டம் சுப்பலாபுரத்திற்கு அருகேயுள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல், வயது 50. ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சண்முகவேலின் உறவினர்கள், அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரிக்க முற்பட்டபோது, கடுமையாக மழைபெய்தது. அது திறந்தவெளி சுடுகாடு என்பதால், எரியூட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே நெருப்பு அணைந்துபோனது. மாற்றுவழிகளை மேற்கொண்டும் பயன் தரவில்லை.
இதையடுத்து, அங்கிருக்கும் வேறு சாதியினரிடம், நிலைமையை விளக்கி, அவர்களது சுடுகாட்டில் சண்முகவேலின் உடலை எரியூட்ட அனுமதிகேட்டபோது மறுத்துவிட்டனர். வேறுவழியின்றி, சண்முகவேலின் பாதி எரிந்தநிலையில் இருந்த உடலை, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து அவரது உறவினர்கள் கிளம்பியிருக்கின்றனர்.
இதே பேரையூர் கிராமத்தில் மற்ற சமுதாய மக்களின் சுடுகாடு எரியூட்டும் தளம், மேற்கூரை, சுற்றுச்சுவர் என பாதுகாப்போடு இருக்கும் நிலையில், ஆதிதிராவிடர் சமுதாயத்தினரின் சுடுகாட்டில் இதுபோன்ற எந்தவித பாதுகாப்பு வசதியும் செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
சாவிற்குப் பிறகும் ஒரு மனிதரின் கண்ணியத்தை விலைபேசும் சாதியத்தின் இந்தக் கொடூர ஒடுக்குமுறை தொடர்பாக, சுடுகாட்டில் இருந்தபடியே சண்முகவேலின் உறவினர்கள் வீடியோ பதிவாக எடுத்து வெளியிட்டனர். அதில், “உடலை எரிக்க ஆதிக்க சாதிக்காரர்களிடம் அனுமதி கேட்டோம், மறுத்துவிட்டனர். சாதி ஒடுக்குமுறை எங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட மறுக்கிறது. எல்லா விதமாகவும் சாதி ஆணவம் இங்கே தலைவிரித்தாடுகிறது. அது சுடுகாட்டில் வந்து நிற்கிறது. எங்கள் நிலையைப் பாருங்கள். அரசுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்” என்று கும்பிட்டபடி கண்ணீர்வடிக்கின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், பேரையூர் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர். ஆனால், பேரையூர் காவல் ஆய்வாளர் எந்தவித வழக்கும் பதிவுசெய்யாமல், சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
வேலூரில் சுடுகாட்டு விவகாரத்தில் சாதி ஒடுக்குமுறை நடந்தபோது, இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், “மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், காவல்நிலையங்கள் என எல்லாமுமே அனைத்து சாதியினருக்கும் பொதுவானவையாக இருக்கும்போது, சுடுகாட்டில் மட்டும் எதற்காக சாதி வித்தியாசம் பார்க்கிறார்கள். அரசே சாதியை ப்ரமோட் செய்கிறதா?” என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாதிக் கொடுமைகளுக்கு என்றுதான் தீர்வு வருமோ!