தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன. நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால் இறுதிக்கட்ட பிரச்சாரக் களம் சூடுபிடித்தது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்பொழுது நிறைவுபெற்றது.
சென்னையில் சட்டமன்றத் தேர்தலையொட்டி 23,500 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''தேர்தல் பரப்புரை முடிந்த பின் வெளியாட்கள் யாரும் இருக்கக்கூடாது. இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும். சென்னையில் மட்டும் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 10 மையங்கள் மிகவும் பதற்றமானவை. வாக்குப்பதிவு மையங்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்கும் குழு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய சென்னை போலீசார் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் விதியை மீறி தேர்தல் பரப்புரை செய்தால் சைபர் பிரிவு கண்காணிக்கும். பொதுமக்கள் வாக்களிக்க தைரியமாக வர வேண்டும். முழு பாதுகாப்பு ஏற்பாடையும் செய்துள்ளோம். 3000 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு மையங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம்'' எனக் கூறியுள்ளார்.