திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜீலை 2ந்தேதி காலை 10 மணியளவில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் 50க்கும் அதிகமானவர்கள் செங்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். கூட்ட அரங்கில் வேளாண்மை துறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் உட்பட முக்கிய அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை.
இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், விவசாயிகள் மீது அக்கறையில்லாத அதிகாரிகளாக உள்ளனர். கூட்டம் என அறிவித்துவிட்டு வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியவர்கள், விவசாயிகள் குறைகளை தீர்க்க வேண்டும், நாங்கள் சொல்லும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே வட்டார அளவில் இதுப்போன்ற விவசாய குறை தீர்வு கூட்டங்களை அரசாங்கம் நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அதிகாரிகள் இதனை ஒரு கண் துடைப்பு கூட்டமாகவே நடத்துகிறார்கள் என வேதனைப் பட்டவர்கள், அதிகாரிகள் வந்தால் தான் கூட்டத்தில் கலந்துக்கொள்வோம், இல்லையேல் கூட்டத்தை புறக்கணித்து செல்வோம் என வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கூறினர். வேளாண்மை துறை அதிகாரிகள், பிடிஓ மற்றும் தாசில்தாரிடம் கூட்டத்துக்கு வாங்க என செல்போனில் கெஞ்சினர்.
சம்மந்தப்பட்ட இரு அதிகாரிகளும், எங்களுக்கு வேற வேலையில்லையா?, அவுங்க உட்கார்ந்து இருக்கிறாங்க என்பதற்காக நாங்க ஓடிவரனுமா என கேள்வி கேட்டதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.