திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், துணைத்தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் வரவேற்று பேசினார். தீர்மானத்தை அலுவலக எழுத்தர் மணிபாண்டி வாசித்தார்.
இக்கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்துதல், வாகனங்களுக்கு எரிபொருள் கட்டணம், அமர்வுப்படி, டெங்கு தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், எழுதுபொருள் செலவினத் தொகை உட்பட 17 தீர்மானங்கள் வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின்போது நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு, தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்தும் வண்ணம் இளைஞர்நலன் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரை பாராட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
திமுக ஒன்றிய குழு உறுப்பினர் காணிக்கைசாமி, “எனது வார்டுக்கு உட்பட்ட கென்டிசம்பட்டி மற்றும் வண்ணம்பட்டிக்கு இடையேயான தார்சாலை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். சாலைப்பணிகள் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் 4 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது” என்றார். இதற்கு அலுவலக மேலாளர் முருகன், “சாலைப்பணிக்கான உத்தரவு வந்தவுடன் விரைவில் தார்சாலை அமைக்கப்படும்” என்றார்.
தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் சாதிக், “சித்தரேவு ஊராட்சி 1வது வார்டு பகுதியில் வடிகாலை சுத்தம் செய்து மாதக்கணக்காகிவிட்டது. புழுக்கள் மிதக்கின்றன” என்றார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர், “ஊராட்சி நிர்வாகம் மூலம் வடிகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பிறகு சட்டமன்றத்தில் தமிழ்நாடு என உச்சரித்து தமிழக மக்களுக்கு பெருமை தேடித்தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக ஒன்றிய குழு உறுப்பினர் காணிக்கைசாமி பாராட்டி கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் காணிக்கைசாமி, நிக்சிதா, அழகுசரவணகுமார், நாகவள்ளி, காணிக்கைராஜ், செல்விகாங்கேயன், பாப்பாத்தி, முத்துமாரி, ஜோதி, சிந்தாமணி, சாதிக் உட்பட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.