திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழாவை போது பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலரையும் காவல்துறையை அதிகாரிகள் கோவிலுக்குள் செல்ல விடாமல் மிக மோசமாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் நீதிபதிகளும் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அப்போதே வருவாய்த் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் உருவானது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. காவல்துறை பாதுகாப்பு என்கிற பெயரில் செய்த அத்துமீறல்களையும் அராஜகங்களையும் மறைத்து தாங்கள் சரியாக நடந்து கொண்டது போன்றும் வருவாய் துறையினர் தான் மிக மோசமாக போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்பாக வருவாய்த் துறையின் அனைத்து பிரிவினரும் இணைந்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளியன்று(13.12.2024) திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபதிருவிழாவில் தீப பணிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் வருவாய்த்துறையில் உள்ள அனைத்து நிலை பணியாளர்களும் கடும் , மன உளைச்சலுடனும், மன வேதனையுடனும் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் என்றுமே காவல்துறை தான் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. அம்மணிஅம்மன் கோபுரத்துக்கு அருகில் இருந்த காவல்துறையினை சேர்ந்த அதிகாரிகள் வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நீதித்துறை சார்ந்த உயர்பதவியில் உள்ளவர்கள் வருகை தந்த பொழுது காவல்துறையினருக்கும் வருவாய்த்துறையினருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை உலகம் அறிந்ததே.
இந்நிலையில் காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்தும் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று(16.12.2024) திங்கள் திருவண்ணாமலை தீனபந்து கட்டிடத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்,தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் Group-II சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இச்சங்கங்களின் மாவட்ட தலைவர்(அ)செயலாளர் மற்றும் இச்சங்கங்களின் மாவட்டத்திற்குள் இருக்கும் மாநில நிர்வாகிகள் கொண்ட கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் முதற்கட்டமாக நாளை(17.12.2024) செவ்வாய் மாலை 05.00மணியளவில் காவல்துறையினை கண்டித்தும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பில் இணைந்துள்ள சங்கங்களின் மாவட்ட, வட்ட , மாநில நிர்வாகிகளும் அனைத்து நிலை ஊழியர்களும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். இதிலும் தீர்வு ஏற்படாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகுவோம்” என அழைப்பு விடுத்துள்ளனர்.