Skip to main content

அண்ணா பல்கலை. விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு! 

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
Anna University affair Tn govt sought the Supreme Court

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதே சமயம் இது தொடர்பாகச் சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆர்.இல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்பதால் எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

எஃப்ஐஆரை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் இந்த வழக்கு தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தச் சென்னை காவல்துறை ஆணையர் அருண் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை எனவே அவர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மட்டுமே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்