/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3309.jpg)
நாகூரில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலால் வீடுகள், இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பு மீனவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதட்டத்தை தணிக்க, மீனவ கிராமத்தில் கலவர தடுப்பு வாகனத்துடன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
நாகை அடுத்துள்ள நாகூர் மேலப்பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும், கீழப்பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் இடையே இடப்பிரச்சனையில் ஆரம்பித்த விவகாரம் துறைமுகத்தில் மீன் விற்பனை வரை முற்றியது. இதனால் இருதரப்பு மீனவர்களிடையே சாதாரணமாகத்துவங்கிய பிரச்சனை முன் விரோதமாக மாறி இரு ஊர் கலவரமாக மாறியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_319.jpg)
இதற்கிடையில் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பு மீனவப் பிரதிநிதிகளையும் அழைத்து அரசு தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையாக மீன்பிடி தொழில் செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று கீழப்பட்டினச்சேரி மீனவர் சுரேஷ் என்பவரை மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேலப்பட்டினச்சேரியைச் சேர்ந்த மற்றொரு சுரேஷை கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் பதிலுக்கு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இரு தரப்பு மீனவர்களிடையே மீண்டும் கலவரம் மூண்டது.
இந்த சம்பவத்தில் மேலப்பட்டினச்சேரி மீனவர்களின் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கீழப்பட்டினச்சேரி மீனவ இளைஞர்களால் சூறையாடப்பட்டன. அங்கிருந்த டி.வி, பிரிட்ஜ். இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1027.jpg)
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட மேலப்பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை நாகூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பதட்டத்தை தணிக்க, மீனவ கிராமத்தில் கலவர தடுப்பு வாகனத்துடன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)